சீனாவை விட பள்ளிகள் அதிகம் ஆனால் கல்வி தரம் குறைவு: இந்தியா குறித்து சர்வே

சீனாவை விட பள்ளிகள் அதிகம் உள்ளது. ஆனால் கல்வி தரம் குறைந்து உள்ளது என கல்வி நிலை குறித்து எடுக்கப்பட்ட சர்வேயில் தெரிய வந்து உள்ளது.
சீனாவை விட பள்ளிகள் அதிகம் ஆனால் கல்வி தரம் குறைவு: இந்தியா குறித்து சர்வே
Published on

புதுடெல்லி,

இந்திய அரசியலமைப்பின் படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு எதிரான தனியார் பள்ளிகளின் விகிதம் 7: 5 என்ற நிலையில் உள்ளது.

தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டத்தில் இந்தியாவில் அதிக அளவிலான தனியார் பள்ளிகள் உள்ளன. 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களில் 71 சதவீத மாணவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்வி பெறுகின்றனர். எஞ்சியிருக்கும் 29 சதவீத மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் பயில்கின்றனர்.

இந்நிலையில் நிதி ஆயோக் திட்டத்தின் மூலம் கல்வியின் தரம் குறித்து நடத்தப்பட்ட சர்வே முடிவில், இந்தியாவில் கல்வி தரத்தினை காட்டிலும், பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

சீனாவில் 5 லட்சம் பள்ளிகள் உள்ளன. அதைவிட 3 மடங்கு அதிகமாக இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. இந்தியாவில் கல்வித்தரம் பாதிக்கப்பட மிக முக்கிய காரணம், பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தகுதியற்ற முறையில் இயங்கும் பள்ளிகள் ஆகும். 4 லட்சம் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 1.5 கோடி மாணவர்கள் நிர்வாகம் சரியில்லாத பள்ளிகளில் பயில்கின்றனர்.

மத்தியபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் கிராமப்பகுதிகளில் 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வியின் தரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்கென இந்தியாவில் அதிக அளவிலான பள்ளிகள் இருந்தபோதிலும், தரமான கல்வி வழங்கப்படுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகையில் ஒத்திருக்கும் சீனாவுடன் ஒப்பிடும்போது, பள்ளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஆனால் தரமான கல்வி வழங்கப்படுவதில்லை.

இந்தியாவில் ஆசிரியர்கள் குறைபாடே பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் வேலைக்கு எடுக்கப்படுவது இல்லை என அதில் கூறப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் , கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 70 ஆரம்ப பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனர். பீகார் மற்றும் உத்தரபிரதேசங்களில் 15 சதவீத ஆரம்ப பள்ளிகளில் 50 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.

அடுத்து, மாணவர்களில் கற்றல் நிலைகள் குறித்து ஆண்டு கல்வி அறிக்கையில் ( ஏஎஸ்இஆர்) கூறப்பட்டு இருப்பதாவது:-

* 5-ம் வகுப்பு மாணவர்களில் பாதிப்பேருக்கு மேல் 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க முடியவில்லை.

* ஒன்றாம் வகுப்பில் சேரும் 100 பேரில் 12ம் வகுப்பு வரும் போது 30 பேராக குறைந்து விடுகின்றனர். இந்த 30 பேரில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லும் தகுதி பெற்றிருக்கவில்லை.

* பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பாடத்தகுதி குறைவாக உள்ளது. மாணவர்களுக்கு கற்று கொடுப்பதற்கான திறமையும் இல்லை என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com