

புதுடெல்லி,
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை வேளாண் மந்திரி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பறவைக்காய்ச்சல் என்பது பறவைகளை கொத்துக் கொத்தாக சாகடிக்கும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்தியாவில் இந்த நோய் கடந்த 2006-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அப்போதிருந்து தற்போதுவரை 500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்த நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இருப்பினும், எச்5என்1 எச்.பி.ஏ.ஐ. வைரசின் கிளேட் 2.3.2.1ஏ வகைக்கு எதி ராக உலகின் முதல் தடுப்பூசியை இந்தியா கண்டுபிடித்து, இந்தியாவிலேயே அதனை தயாரித்து உள்ளது. இது இந்த பிரிவில் உலகின் முதல் தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசியை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ்சிங் சவுகான், நேற்று மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-
தற்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ள இந்த தடுப்பு மருந்து, லட்சக்கணக்கான கோழிப்பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். இந்த புதிய உள்நாட்டு தடுப்பூசிக்கு, சிறு கோழிப்பண்ணையாளர்களும் வாங்கக்கூடிய வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு டோசின் அதிகபட்சவிலை ரூ.2 ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.