இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்

இந்தியாவும், பிரேசிலும் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் இன்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது கனிம வளங்கள் மற்றும் பாதுகாப்பு துறை தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

“இந்தியா-பிரேசில் இடையிலான உறவுகள், அதிபர் லூலா டி சில்வாவின் தொலைநோக்கு பார்வையாலும், உத்வேகம் அளிக்கும் தலைமையாலும் நீண்ட பயனை அடைந்துள்ளன.

லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக பிரேசில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்(இந்திய மதிப்பில் சுமார் 1.81 லட்சம் கோடி) கொண்டு செல்ல நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இந்தியாவும், பிரேசிலும் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடைகிறது. பயங்கரவாதமும் அதன் ஆதரவாளர்களும் முழு மனிதகுலத்திற்கும் எதிரிகள் என்பதை இந்தியாவும், பிரேசிலும் ஒப்புக்கொள்கின்றன.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com