இந்தியா-கனடா வர்த்தக ஒப்பந்தம்; இன்று தொடங்குகிறது முக்கிய பேச்சுவார்த்தை

இந்தியா - கனடா இடையிலான விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்துக்கான 5-வது சுற்று பேச்சுவார்த்தை, கனடாவின் ஒட்டாவாவில் இன்று தொடங்குகிறது.
இந்தியா - கனடா
கோப்பு படம்
Published on: 

இந்தியாவும் கனடாவும் விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் இறுதி செய்வதற்கு முனைப்பு காட்டி வருகின்றன. ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான மூன்றாம் கட்ட இரு தரப்பு பேச்சுவாா்த்தை கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. நான்காம் கட்டப் பேச்சுவாா்த்தை கடந்த மாதம் 18 ஆம் தேதி டெல்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று கனடாவில் நடைபெறுகிறது. இதுகுறித்து வர்த்தகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் இந்த பேச்சுவார்த்தை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதன்படி, அக். 9-ம் தேதி பேச்சுவார்த்தை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை முடிக்க இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இதனால், பேச்சுவார்த்தை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரி குறைக்கப்படுவதற்கோ அல்லது முற்றிலும் நீக்கப்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது. மேலும், திறன் வாய்ந்த பணியாளர்கள் இரு நாடுகளுக்கும் சென்று பணியாற்றுவதற்கான விதிகளை எளிதாக்குதல், முதலீடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும்.இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை இந்தியாவும், கனடாவும் முதன்முதலில் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின.

பின்னர், பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் முறையான பேச்சுவார்த்தையை தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. இதற்கிடையே, கனடா வர்த்தக அமைச்சர் மானிந்தர் சித்து, 300 பேர் கொண்ட வர்த்தக குழுவுடன் இந்த மாதம் டெல்லிக்கு வர உள்ளார் இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com