இந்தியாவில் இஸ்லாமியர்கள் துன்பப்படுகின்றனர் என ஈரான் உச்ச தலைவர் கருத்து - இந்தியா பதிலடி


தினத்தந்தி 17 Sept 2024 10:35 AM IST (Updated: 17 Sept 2024 1:09 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இஸ்லாமிய மதத்தினர் துன்பப்படுகின்றனர் என்று ஈரான் உச்ச தலைவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதராக கூறப்படும் முகமது நபிகளின் பிறந்தநாள் தினத்தையொட்டி ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவில் இஸ்லாமிய மதத்தினர் துன்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அயத்துல்லா அலி கமேனி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்லாமிய அடையாளங்களை பகிர்ந்துள்ள நம்மை எப்போதும் அலட்சியப்படுத்த இஸ்லாமிய எதிரிகள் முயற்சிக்கின்றனர். இந்தியா, காசா, மியான்மர் அல்லது உலகின் எந்த பகுதியிலும் இஸ்லாமியர்கள் படும் துன்பங்களை மறந்தால் நாம் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது' என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் இஸ்லாமிய மதத்தினர் துன்பப்படுவதாக ஈரான் உச்ச தலைவர் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் நாடுகள் தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து முதலில் கவனிக்கும்படி இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்து ஈரான் உச்ச தலைவர் தெரிவித்த கருத்துக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற தவறான தகவல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவின் சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் நாடுகள் முதலில் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து பார்த்துவிட்டு பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story