

புதுடெல்லி,
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துதுள்ள காஷ்மீருக்கு அமெரிக்க பிரதிநிதி இல்ஹான் ஒமர் வருகை தந்ததை இந்தியா கடுமையாக கண்டிப்பதாக கூறினார்.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதியான இல்ஹான் உமர், பாகிஸ்தானுக்கு பயணம் செய்து வருகிறார். அங்கு அவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார். மேலும் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியையும் பார்வையிட்டார்.
இதுகுறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அமெரிக்கப் பிரதிநிதியின் பயணம், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது. இல்ஹான் ஒமர் கடைப்பிடிக்கும் அரசியல், ஒரு குறுகிய மனம் கொண்ட பார்வையாகும்.
தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் காபூலில் பள்ளியில் நடைபெற்ற தாக்குதல்களை கண்டித்தார்.
அவர் பேசியதாவது, பயங்கரவாத தாக்குதல்களை நாங்கள் எப்போதும் கண்டிப்பதில் நேர்மையாக இருக்கிறோம். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நடக்கும் அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களையும் நாங்கள் கண்டித்துள்ளோம், அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.