மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி
Published on

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது.

இந்த சூழலில்,ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. பெரும்பாலான நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தயராக இருந்த போதிலும், சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஐநாவுக்கு சீனா அனுப்பிய குறிப்பில், மசூத் அசாருக்கு எதிராக தடை கோரும் பரிந்துரையை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி ஆதரிக்க மறுத்துள்ளது. சீனா 4-வது முறையாக மசூத் அசாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

சீனாவின் செயல்பாடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பிற உறுப்பு நாடுகளுக்கும் கடும் கோபத்தை அளித்துள்ளது. சீனா இதே கொள்கையை கடை பிடித்தால், மாற்று வழிகளை பின்பற்ற வேண்டி இருக்கும் எனவும் பிற உறுப்பு நாடுகள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com