

புதுடெல்லி:
இந்தியாவில் எந்தத் துறையிலும் ஏகபோகத்துக்கு அனுமதி இல்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் அறிமுகமாவதை சில சக்திவாய்ந்த வர்த்தக நிறுவனங்கள் தடுப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதற்கான அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் சில பெரும் வர்த்தக நிறுவனங்கள் இருப்பதாகவும், அவை இந்திய மக்களுக்கான இணையச் சேவையில் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைக்க முயற்சிப்பதாகவும் மஸ்க் தனது எக்ஸ் தளப் பதிவுகளில் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவதற்கான உரிமம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய அவர், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியைக் குறிப்பிட்டும் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்திலும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறையில் எந்தவொரு நிறுவனத்துக்கும் மட்டும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது: எந்த துறையிலும் ஏகபோகத்திற்கு இந்தியா அனுமதி அளிக்காது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ சாட்காம் மற்றும் பார்தி ஏர்டெல் ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப் ஆகிய 3 நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் சேவைகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. அமேசானின் குயிப்பர் நிறுவனமும் இந்தியாவில் இத்தகைய சேவைகளை வழங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. அதற்கான நடைமுறைகளை அந்நிறுவனம் பின்பற்ற வேண்டும்.
செயற்கைக்கோள் இணையச் சேவைகளைத் தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு நிறுவனமும் பாதுகாப்பு தொடர்பான நிபந்தனைகளைத் தனித்தனியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். செயற்கைக்கோள் அலைக்கற்றைக்கான கட்டண நிர்ணயம் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆலோசனை நடத்தி வருவதாகவும், இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் . எந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துவது என்பதைத் தேர்வு செய்யும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்றார்.