இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது: நிதி ஆயோக் தகவல்

இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NITIAayog
இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது: நிதி ஆயோக் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், வியாழக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும், 2030-ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும். ஆனால், தற்போதைய நிலையிலேயே தேசம் இருந்தால் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும். இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் இழக்க நேரிடும்.

அந்த காலகட்டத்தில் 40 சதவீதம் பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். 2020-ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருகின்றனர். 60 கோடி பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் 70 சதவீத நீர்நிலைகள் அசுத்தமானதாக மாறி வருகிறது. தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளில் இந்தியா 120 இடத்தில் உள்ளது. நாட்டில் 52 சதவீத நிலப்பரப்பு வேளாண் பகுதிகளாக இருப்பதால் மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர். நீர்ப்பாசன திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com