

புதுடெல்லி,
பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா-பின்லாந்து இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் முக்கியத்துவம் பெற்ற தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் அலெக்சாண்டர் ஸ்டப் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும், பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு விவகாரத்திலும் ராணுவ மோதலால் தீர்வு காண கூடாது என இந்தியாவும், பின்லாந்தும் ஒப்பந்தம் செய்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மோதல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அமைதியை நோக்கிய ஒவ்வொரு முயற்சிக்காகவும் தொடர்ந்து நாங்கள் ஆதரவளிப்போம் என்று கூறினார்.
இந்த நிலையில், இந்தியா-பின்லாந்து இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் கூறுகையில், மாசு கட்டுப்பாடு, குப்பை மேலாண்மை, காலநிலை மாற்றம், காடு மற்றும் இயற்கை வளங்கள் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா-பின்லாந்து இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.