நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நிதிப்பற்றாக்குறை 42.1 சதவீதத்தை எட்டியது - மத்திய அரசு தகவல்

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.16.96 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.
நிதிப்பற்றாக்குறை
கோப்புப்படம்
Published on: 

புதுடெல்லி,

நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நிதிப்பற்றாக்குறை 42.1 சதவீதத்தை எட்டியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையேயான இடைவெளி அதாவது நிதிப்பற்றாக்குறை ரூ.16.96 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 4.3 சதவீதம் ஆகும்.

நிதிப்பற்றாக்குறை

இதில் 42.1 சதவீதத்தை நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் எட்டியிருப்பதாக மத்திய தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் (சி.ஜி.ஏ.) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. அதாவது செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் 6 மாத காலத்தில் நிதிப்பற்றாக்குறை ரூ.7,14,413 கோடியாக இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட அதிகம் ஆகும். கடந்த 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டின் நிதிப்பற்றாக்குறை மதிப்பீட்டில் 36.5 சதவீதத்தை முதல் 6 மாதங்களில் எட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகர வரி வருவாய்

செப்டம்பர் மாத நிலவரப்படி, மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.12.76 லட்சம் கோடியாக, அதாவது நடப்பு நிதியாண்டின் மதிப்பீட்டில் 44.5 சதவீதமாக இருந்ததாக சி.ஜி.ஏ. அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளது.

இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 43.3 சதவீதம் எனவும் அரசு தெரிவித்து உள்ளது. மாதாந்திர கணக்குத் தரவுகளின்படி, 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில், மொத்த செலவினம் சுமார் ரூ.25.5 லட்சம் கோடியாக, அதாவது 47.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

X