

புதுடெல்லி,
2021-22 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.4 சதவீதம் சரிவை சந்தித்தது.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதன் காரணமாக இந்த நிதியாண்டின் துவக்கத்தில் உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம் காணப்பட்டது. முந்தைய ஜனவரி - மார்ச் காலாண்டில் 1.6 சதவீதம் முன்னேற்றம் காணப்பட்டது.
இந்நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவல்படி 2021-22 ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை ஏற்படாமல் இருந்திருந்ததால் இந்த வளர்ச்சி இன்னும் கூடியிருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம் கடந்த ஆண்டில் கடும் வீழ்ச்சி கண்ட வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள், இந்தாண்டு 68.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது.