போர் பதற்றம்: இந்தியாவிடம் போதுமான அளவு "எல்.பி.ஜி. கையிருப்பு உள்ளது" - மத்திய அரசு

முதல்கட்டமாக இந்தியாவுக்கு 95 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷியா வழங்கியுள்ளது.
போர் பதற்றம்: இந்தியாவிடம் போதுமான அளவு  "எல்.பி.ஜி. கையிருப்பு உள்ளது" - மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

உலகப் பொருளாதாரத்தின் இதயம் என்று அழைக்கப்படுவது ஹார்முஸ் ஜலசந்தி. ஈரான் அருகே அமைந்துள்ள இந்த ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீ தம் கச்சா எண்ணெய்யும், இந்தியாவுக்கு தேவையான 50 சதவீதம் கச்சா எண்ணெய்யும் செல்கிறது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக இப்போது இந்த வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.

3,200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலிலும் துறைமுகங்களிலும் தேங்கி நிற்பதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன. பெட்ரோல்-டீசல் எரிபொருளுக்கு முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளநிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் உதவுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. ரஷியா எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை காரணம் காட்டி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து இருந்ததால் இந்த உதவியை பெற இந்தியா தயக்கம் காட்டியது.

ஆனால் தற்போது ரஷியாவின் உதவியை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி முதல்கட்டமாக இந்தியாவுக்கு 95 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷியா வழங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் ரஷியாவின் பால்டிக் மற்றும் கருங்கடல் வழியாக இந்தியாவின் அரபிக் கடலுக்கு ரஷிய கச்சா எண்ணெய் பீப்பாய்கள் வரவிருக்கின்றன.

ஏற்கனவே இவை புறப்பட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துவிட்டது. ஒருவாரத்துக் குள் அவை இந்தியாவுக்கு வந்தடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவுக்கு தேவையான 40 சதவீதம் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதாகவும் ரஷியா உறுதியளித்துள்ளது.

இந்தநிலையில், இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. கையிருப்பு உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஏதும் மூடப்படவில்லை. கடந்த மாதம் 20% கச்சா எண்ணெய் ரஷியாவில் இருந்து இறக்குமதி, அமெரிக்காவிலிருந்து ஜனவரி முதல் எல்.பி.ஜி இறக்குமதி தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க,எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்.பி.ஜிக்கு உற்பத்திக்குத் தேவையான Propane, Butane வாயுக்களை Petrochemical நிறுவனங்களுக்கு கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் அனைத்து எரிவாயுவையும் இந்தியன் ஆயில், எச்.பி.சி.எல், பி.பி.சி.எல் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com