சிறுபான்மையினருக்கும் பிடித்தமான இடமாக இந்தியா உள்ளது: கிரண் ரிஜிஜூ

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் சிறுபான்மையினர் சித்ரவதை செய்யப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும், அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும் காங்கிரஸ் ஆதரவுடன் இடதுசாரிகள் ஓயாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இத்தகைய கட்டுக்கதைகள் இந்தியாவுக்கு எந்த வகையிலும் உதவாது. இந்தியாவில் உள்ள மக்கள், சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இது மதச்சார்பற்ற நாடு. நமக்கு அரசியல் சாசனம் உள்ளது. சிறுபான்மையோ, பெரும்பான்மையோ ஒவ்வொருவரும் சமம்.
காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒருசில சம்பவங்களும், கலவரங்களும் நடந்திருக்கலாம். ஆனால் பொதுவாக, சிறுபான்மையினர் இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளனர்.இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால்தான், அனைத்து சிறுபான்மையினரும் முழு சுதந்திரமும், பாதுகாப்பும் பெற்றுள்ளனர்.பெரும்பான்மை இந்துக்கள் மதசார்பற்றவர்களாகவும், சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பதால், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உள்ளனர். அதனால்தான் ஒவ்வொரு சிறுபான்மையினருக்கும் பிடித்தமான இடமாக இந்தியா இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






