

லக்னோ
உத்தர பிரதேசத்தில் ஜீவார் நகரில் ரூ.11,200 கோடி மதிப்பில், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், முதல்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான உருவாக்க பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனை முன்னிட்டு நொய்டா சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று அதனை திறந்து வைப்பதற்காக உத்தர பிரதேசத்திற்கு சென்றார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி மேடையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.
இதன்பின்னர் பிரதமர் மோடி நொய்டா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து கூட்டத்தினரின் முன் அவர் பேசும்போது, இந்த நொய்டா சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் புதிய வலிமை என அவர் குறிப்பிட்டார். இந்த விமான நிலையம் மாநிலத்திற்கு வளர்ச்சி ஊக்கியாக இருப்பதுடன், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வாய்ப்புகளையும் உருவாக்கி தரும் என்றார்.
இந்தியாவின் விமான போக்குவரத்து துறை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. புதிய விமான நிலையங்கள் நாடு முழுவதும் கட்டப்பட்டு வருவதுடன், நூற்றுக்கணக்கான புதிய விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்களும் வந்து கொண்டிருக்கின்றன. இவை, இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார். இதற்கு வேண்டிய பயிற்சிக்கான வசதிகளையும் அரசு விரிவாக்கம் செய்து வருகிறது என்று கூறினார்.
நம் நாட்டில் விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் (எம்.ஆர்.ஓ. துறை) பணிக்காக, 85 சதவீதம் வரை வெளிநாடுகளுக்கே விமானங்களை கொண்டு சென்று சரி செய்து வந்தோம். அதனால், எம்.ஆர்.ஓ. துறையில் சுய சார்புடன் இந்தியா இருக்க வேண்டும் என முடிவு செய்து, நாடு முழுவதும் அதற்கான வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன என கூறினார். இதனால், வருங்காலத்தில் வெளிநாட்டு விமானத்திற்கும் நாம் சேவை செய்ய முடியும். அதிக வருவாயையும் ஈட்ட முடியும் என்றார்.
அவர் பேசும்போது, மேற்காசியாவில் நடந்து வரும் மோதலையும் குறிப்பிட்டார். மேற்காசியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இந்த சவாலை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு, மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையே இந்தியா பெருமளவு சார்ந்துள்ளது. இந்த சுமை நாட்டிலுள்ள குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் மீது விழாமல் அரசு உறுதி செய்து வருகிறது என்றும் கூறினார். தன்னுடைய குடிமக்களை பாதுகாக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் நாடு மேற்கொண்டு வருகிறது என உறுதியாக கூறினார்.