எரிபொருள் இறக்குமதிக்கு வேறு நாடுகளை தேடும் இந்தியா.. வினியோகம் செய்ய சம்மதம் தெரிவித்த நாடுகள்
புதுடெல்லி,
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால், முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியில் சரக்கு போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. காரணம், ஹார்முஸ் வழியாக மட்டும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை வருவதில்லை. ரஷியா, மேற்கு ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்தும் தடையின்றி எரிசக்தி கிடைப்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதம் மட்டுமே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. மீதி 60 சதவீதம், இதர வழித்த டங்கள் வழியாக வருகிறது. அந்த வழித்தடங்களில் எந்த பாதிப்பும் இல்லை. அதனால்தான் சர்வதேச தட்டுப்பாடு காலங்களிலோ அல்லது கொரோனா காலத்திலோ கூட இந்திய வாடிக்கையாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
தற்போது, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு கூடுதலாக எரிவாயு வினியோகம் செய்ய முன்வந்துள்ளன. நீண்டகால எரிபொருள் வினியோகத்துக்காக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகளுடன் புதிய எரிபொருள் வினியோக ஒப்பந்தங்களை இந்தியா செய்து கொண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 27-ல் இருந்து 40 ஆக அதிகரித்துள்ளது. எரிபொருள் வினியோகத்துக்கு ஒரே வழித்தடத்தை சார்ந்திருக்கும் காலம் முடிந்து விட்டது. 'தேசநலன்' என்ற ஒரே கொள்கை அடிப்படையில்தான் எரிபொருள் இறக்குமதி முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
கச்சா எண்ணெய் எங்கு கிடைக்கிறதோ, எங்கு மலிவு விலையில் கிடைக்கிறதோ அங்கு வாங்குகிறோம். தொடர்ந்து அப்படியே வாங்குவோம். இதுதான் எங்களது உறுதியான நிலைப்பாடு” என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

