உலகத்தில் இன்றும் கூட சிறந்த நாடாக பாரதம் உள்ளது: விண்வெளியில் இருந்து சுபான்ஷு சுக்லா பேச்சு

நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
உலகத்தில் இன்றும் கூட சிறந்த நாடாக பாரதம் உள்ளது: விண்வெளியில் இருந்து சுபான்ஷு சுக்லா பேச்சு
Published on

புதுடெல்லி,

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் 25-ந்தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இவர்களுடைய 14 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, நாளை பூமிக்கு திரும்புகின்றனர். இதற்காக, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் கதவுகள் இந்திய நேரப்படி பகல் 2 மணிக்கு திறக்கப்படுகிறது. பகல் 2.25 மணிக்கு சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்கலத்திற்குள் நுழைய உள்ளனர்.

தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு வருகிற 15-ந்தேதி பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடையும்.

விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதற்காக சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் நாளை புறப்பட தயாராக உள்ள சூழலில், பிரிவு உபசார நிகழ்ச்சி ஒன்று இன்று நடத்தப்பட்டது. அப்போது சுக்லா பேசினார். அவர், எனக்கு இது மேஜிக் போன்று இருக்கிறது. எனக்கு கிடைத்த மிக அற்புதம் வாய்ந்த பயணம் இதுவாகும் என்றார்.

இன்றும் கூட பாரதம், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, உலகத்தில் சிறந்த நாடாக உள்ளது என்றார். 1984-ம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவும் கூட அப்போது, இந்த வார்த்தைகளை பேசினார்.

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்தியா லட்சியம் நிறைந்த, அச்சமற்ற, நம்பிக்கை வாய்ந்த மற்றும் பெருமை மிகுந்த நாடாக காணப்படுகிறது என்று சுக்லா கூறினார். என்னுடன் நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com