இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு நிறைவு; ஜப்பான் புறப்பட்டார் சனே தகாய்ச்சி

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு நிறைவு; ஜப்பான் புறப்பட்டார் சனே தகாய்ச்சி
Published on

புதுடெல்லி

டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டி நிறைவு பெற்ற நிலையில், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

முதல் இந்திய பயணம்

ஜப்பான் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்ற சனே தகாய்ச்சி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தார். தலைநகர் டெல்லிக்கு கடந்த 1-ந்தேதி(நேற்று) வருகை தந்த சனே தகாய்ச்சியை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர் சகே தகாய்ச்சி மேற்கொண்ட முதல் இந்திய பயணம் இதுவாகும்.

இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு

தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் சனே தகாய்ச்சி பங்கேற்றார். முன்னதாக டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த சனே தகாய்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படைகளைச் சேர்ந்த அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் இசைக்குழுக்கள் சார்பில் ஜப்பான் பிரதமருக்கு மரியாதை நிமித்தமான அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு ஜப்பான் பிரதமரை வரவேற்றார். தொடர்ந்து இன்று நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், தகாய்ச்சியும் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த உச்சிமாநாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர், தலைவர்கள் இருவரும், பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

வர்த்தக மன்ற கூட்டம்

பின்னர் டெல்லி நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் வர்த்தக மன்ற கூட்டத்தில் தகாய்ச்சி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்கள் இந்திய சந்தையில் வினியோக சங்கிலிகள், செமிகண்டக்டர்கள், முக்கிய கனிமங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி துறையில் ரூ.1.19 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளன.

தொடர்ந்து, அரியானாவில் தொடங்கப்படும் மாருதி சுசூகியின் புதிய உற்பத்தி ஆலையை ஜப்பான் பிரதமருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது இந்தியாவில் அமைய உள்ள மாருதி சுசூகியின் 4-வது உற்பத்தி ஆலை. இந்த ஆலைகளின் மொத்த மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி ஆகும்.

நாடு திரும்பினார்

இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டி நிறைவு பெற்ற நிலையில், 3 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வந்த ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா-ஜப்பான் கூட்டுறவை பொதுவான லட்சியங்களை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் வகையிலான ஒரு மறக்கமுடியாத பயணம் நிறைவடைந்தது. மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற 16-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் இருந்து புறப்பட்டார். அவரை மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் வழியனுப்பி வைத்தார்.

ஜப்பான் பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம், இரு நாடுகளின் கூட்டு வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு இன்றியமையாததும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதுமான ஒரு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான இரு தரப்பினரின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com