எரிபொருள் வாங்க இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி

பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
எரிபொருள் வாங்க இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி
Published on

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் இலங்கையின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால், அந்நாடு நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியிலும் அந்நாடு சிக்கியுள்ளதால் எரிபொருள் கொள்முதல் செய்வதிலும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளது.

இலங்கையில் தற்போது உள்ள நிலவரப்படி வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே எரிபொருளுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும் என்று அந்நாட்டு எரிசக்தி துறை மந்திரி உதயா கம்மன்பிலா தெரிவித்து இருந்தார்.

இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம், அந்நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான பாங்க் ஆப் சிலோன் மற்றும் பியூப்பிள்ஸ் வங்கி ஆகிய இரண்டிற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது.

இதனால், எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை திட்டமிட்டு இருந்தது. இந்தியாவிடம் இருந்து ரூ.7,391 கோடி கடன் உதவியை இலங்கை அரசு கோரியிருந்தது.

இந்த நிலையில் தற்போது பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இலங்கை நிதி மந்திரி பஷில் ராஜபக்சே இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடனுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com