இந்திய, மலேசிய வர்த்தகம் இனி ரூபாயில் நடக்கும் - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவும், மலேசியாவும் இனி ரூபாயில் வர்த்தகம் செய்து கொள்ள முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய, மலேசிய வர்த்தகம் இனி ரூபாயில் நடக்கும் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

ரூபாயில் வர்த்தகம்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரினால் ரஷியாவுக்கு அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் பிற பணத்தின் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு இல்லை.

இந்தியா ஏற்கனவே போத்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மொரீசியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷியா, செசல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா, இங்கிலாந்து ஆகிய 17 நாடுகளுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள பாரத ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய, மலேசிய வர்த்தகம்

இப்போது இந்த வரிசையில் மலேசியாவும் சேருகிறது. இதனால் இந்தியா, ரூபாயில் வர்த்தகம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்கிறது. இதுகுறித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே இனி ரூபாய் நோட்டில் வர்த்தகம் செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் தற்போது பின்பற்றப்படுகிற பிற நாடுகளின் பணத்திலும் வர்த்தகம் மேற்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை அனுமதிப்பது என்று பாரத ரிசர்வ் வங்கி, முடிவு எடுத்ததைத் தொடர்ந்துதான், இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையேயான வர்த்தகத்தை இந்திய ரூபாயில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்

பாரத ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை எளிதாக்குவதையும், இந்திய ரூபாயில் உலகளாவிய வர்த்தகங்கள் நடைபெறுவதை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள இந்திய சர்வதேச மலேசிய வங்கி, இந்தியாவில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா மூலம் சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்கைத் திறப்பதன் மூலம் இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, மலேசியா இடையேயான வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ளும் முடிவினால், இரு தரப்பு ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் தாங்கள் வர்த்தகம் செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறந்த விலையை அடையலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com