

புதுடெல்லி
கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே ஈடுகட்டுகிறது. கடந்த ஆகஸ்டில் இந்தியா நாள் ஒன்றுக்கு 44 லட்சம் பேரல்கள் என்ற அளவில், 12 பில்லியன் டாலர்களுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது என்றால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, ரூபாய் மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது அந்த உயர்வு 46 சதவீதமாக உள்ளது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதி அளவை குறைத்துக் கொள்ள இந்தியா திட்டமிட்டு வருகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு தேவையான கையிருப்பு வைக்கும் நிலையில், அதை குறைப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைத்து, டாலருக்கான தேவையை குறைப்பதே இதன் நோக்கம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.