உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்

உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.

உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள், மிலிட்டரி ரைடக்ட் என்ற ராணுவ இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, சுறுசுறுப்பான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை, மொத்த வான்படை, கடற்படை, தரைப்படை, அணுஆயுத பலம், சராசரி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் ராணுவ வலிமை குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டது.

அந்த ராணுவ வலிமை குறியீட்டின்படி, 100 புள்ளிகளுக்கு 82 புள்ளிகள் எடுத்து சீனா முதலிடத்தில் உள்ளது. 74 புள்ளிகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்திலும், 69 புள்ளிகளுடன் ரஷியா 3-ம் இடத்திலும், 61 புள்ளிகளுடன் இந்தியா 4-ம் இடத்திலும், 58 புள்ளிகளுடன் பிரான்ஸ் 5-ம் இடத்திலும், 43 புள்ளிகளுடன் இங்கிலாந்து 9-ம் இடத்திலும் உள்ளன.

ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், ராணுவ வலிமையில் அந்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, ராணுவத்துக்கு ஆண்டுக்கு 73 ஆயிரத்து 200 கோடி டாலர் செலவிடுகிறது. சீனா, 26 ஆயிரத்து 100 கோடி டாலரும், இந்தியா 7 ஆயிரத்து 100 கோடி டாலரும் செலவிடுகின்றன.

போர் வருவதாக யூகித்துக்கொண்டால், 14 ஆயிரத்து 141 விமானங்கள் கொண்ட அமெரிக்கா வான்வழி போரில் வெற்றி பெறும். 406 கப்பல்கள் கொண்ட சீனா, கடல்வழி போரில் வெற்றி பெறும். 54 ஆயிரத்து 866 ராணுவ வாகனங்கள் கொண்ட ரஷியா, தரைவழி போரில் வெற்றி பெறும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com