

புதுடெல்லி
இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும் இந்த கூட்டங்களில் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டமியற்றல், நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இதில் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலையில் தொடங்கும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சம்பிரதாய முறைப்படி புறப்பட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை அணிவகுப்பு நாடாளுமன்றம் அழைத்துவரப்பட்டார்.
ஜனாதிபதி தனது உரையை தொடங்கும் முன் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் மசோதாவை தமிழக கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் தாமதம் செய்வதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெறுகிறது
சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவை அழிப்பதில் இந்திய தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாட்டின் 75% மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது..
அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .
டாக்டர் அம்பேத்கர் தனது இலட்சிய சமுதாயம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவம் மட்டுமல்ல, மக்களுக்கான மரியாதை உணர்வுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. எனது அரசாங்கம் அம்பேத்கரின் கொள்கைகளை அதன் வழிகாட்டும் கொள்கையாகக் கருதுகிறது.
ரூ.64,000 கோடி மதிப்பிலான பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம், எதிர்காலத்தில் சுகாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றும்.
யாரும் பசியுடன் வீடு திரும்பக்கூடாது என்பதற்காக, ஏழைகளுக்கு இலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது . இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய உணவு விநியோக திட்டத்தை நடத்தி வருகிறது; அந்த திட்டம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது.
பொருளாதாரத்தில் கடும் பாதிப்படைந்த ஏழைகளுக்கு நேரடியாக பணம் கிடைப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொரோனா பொதுமுடக்க காலத்தில் அனைவருக்கும் பேருதவியாக இருந்தது.
கொரோனா கட்டுப்பாடுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கான நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருட்களின் சதவிகித 33% அதிகரித்துள்ளது என கூறினார்.