இந்தியா-ரஷியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்று தொடக்கம்

கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்க 65 வீரர்களைக் கொண்ட இந்திய ஆயுதப்படைக் குழுவினர் ரஷியா சென்றுள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ரஷியாவின் ராணுவ படைகளிடையே ‘ZAPAD 2025’ என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறுகிறது. இன்று(10-ந்தேதி) தொடங்கி வரும் 16-ந்தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளது. ரஷியாவின் நிஸ்னியில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்தில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக 65 வீரர்களைக் கொண்ட இந்திய ஆயுதப்படைக் குழுவினர் நேற்று ரஷியா புறப்பட்டுச் சென்றனர். இரு நாட்டு ராணுவத்தின் செயல்திறனை பரஸ்பரம் மேம்படுத்தும் நோக்கில் இந்த கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சியின்போது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான தந்திரங்கள் மற்றும் நுட்பங்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.
'ZAPAD 2025' பயிற்சியில் பங்கேற்பது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் எனவும், இந்தியா-ரஷியா இடையிலான நட்புறவை வளர்க்கவும், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் உணர்வை வலுப்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






