இந்தியா இஸ்ரேலை பின்பற்ற வேண்டும் - பவன் கல்யாண்

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என்று ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.
அதே நேரம் பாகிஸ்தானும் சில ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்தியாவும் ஏவுகணை சோதனை நடத்தியதுடன், போர் விமானங்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் போர் பதற்றம் தொடர்பாக பேசியுள்ளார். அதாவது, "இந்தியா இஸ்ரேலை பின்பற்ற வேண்டும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம். இஸ்ரேல் எப்படி பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்கிறதோ, அதேபோல நாமும் துணிவாக செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை முற்றிலும் வேரறுப்பதி அவசியம்." என்று தெரிவித்துள்ளார்.






