

புதுடெல்லி,
சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா-பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. டோக்லாம் (டோங்லாங்) என அழைக்கப்படும் இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீனா சாலை அமைக்க முற்பட்டது.
இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதும் மோதல் போக்கு 73 நாட்கள் நீடித்து பின்னர் அமைதிநிலைக்கு திரும்பியது. இருதரப்பு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் காரணமாக பிரச்சனையில் தீர்வு ஏற்பட்டது என இந்தியா அறிவித்தது. இருநாட்டு ராணுவமும் தங்களுடைய நிலைக்கு திரும்பியது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீனா குறிப்பிட்ட அளவு ராணுவத்தை அங்கு நிறுத்தி கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது. இதற்கிடையே இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாக சீனா கூறியது. ஆனால் எல்லையில் அமைதியை உறுதிசெய்வது என்பதுதான் உறவை வலுப்படுத்தும் என இந்தியா குறிப்பிட்டது.
வரும் ஜூன் மாதம் பிரதமர் மோடி சீனா செல்கிறார். சீனாவில் கிங்டாவோ நகரில் ஜூன் 9-ம் தேதி முதல் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இந்நிலையில் இப்போது டோக்லாம் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டோக்லாம் விவகாரத்தை குறிவைத்து மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் டேராடூனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதி விவகாரத்தில் இந்தியா விழிப்புடன் உள்ளது.
அங்கு எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் இந்தியா தயாராக இருக்கிறது. அங்கு எதிர்பாராத நிலைமை ஏற்பட்டாலும் இந்தியா சமாளிக்கும். நமது படைகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. எல்லைப் பகுதியில் நமது தேசத்தின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவோம் என்றார். பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளநிலையில், டோக்லாம் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கவுதம் பம்பாவாலே
சீனாவிற்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே ஹாங்காங்கை தலைமையகமாக கொண்டு செயல்படும் தெற்கு சீனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய போது டோக்லாம் விவகாரத்திற்கு சீனாதான் காரணம் என குற்றம் சாட்டியதாக செய்தி வெளியாகியது. எல்லையில் இருதரப்பு நிலையை சீனா மாற்ற முயற்சி செய்தது, அதனால்தான் டோக்லாம் சம்பவம் நடைபெற்றது. இதுபோன்று டோக்லாமில் எல்லை நிலையை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டால் இதுபோன்ற மோதல் சம்பவம் வரும் காலங்களில் நடக்கவும் செய்யும் என்றார்.
சீனா பதில்
கவுதம் பம்பாவாலேவின் கருத்துக்கு பதில் கூறிஉள்ள சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங், டோல்காம் பகுதி சீனாவிற்கு சொந்தமானது, வரலாற்று மரபுகள் உள்ளது. எங்களுடைய இறையாண்மையின் கீழ்தான் டோக்லாமில் எங்களுடைய செயல்பாடு உள்ளது. அங்கு எல்லையில் மாற்றம் என்ற விஷயமே கிடையாது. கடந்த ஆண்டைய ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் பிரச்சனையை சரியாக தீர்த்தமைக்கும் நன்றி. அதிலிருந்து இந்திய தரப்பில் பாடம் படித்துக்கொள்ளப்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்தியா வரலாற்று மரபுகளுக்கு மதிப்பளிக்கும், இருதரப்பு உறவை வலுப்படுத்த எல்லையில் அமைதியான சூழ்நிலையை உறுதிசெய்ய சீனாவுடன் இணைந்து பணியாற்றும் என நாங்கள் நம்புகிறோம் என கூறிஉள்ளார்.