

கொழும்பு,
இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடலோர காவல்படை சார்பில் தோஸ்தி என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு பயிற்சி நடந்து வருகிறது. இந்தியா-மாலத்தீவு நாடுகள் மட்டும் பங்கேற்று வந்த இந்த பயிற்சியில், 2012-ம் ஆண்டு முதல் இலங்கையும் இணைந்து கொண்டது.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்தப்படும் இந்த முத்தரப்பு பயிற்சி இந்த ஆண்டு 30-வது ஆண்டை எட்டியுள்ளது. இந்த 3 நாட்டு கடலோர காவல் படையினருக்கான 15-வது பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய பெருங்கடல் பகுதியில் நடந்த இந்த பயிற்சி நேற்று மாலத்தீவில் நிறைவடைந்தது.
இந்த நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், 3 நாடுகளின் கடலோர காவல்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குதல் போன்றவையே இந்த பயிற்சியின் நோக்கம் என மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.