“ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கப்பட்டுள்ளது” தகவல்

ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளைக் குறைந்த அளவில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கப்பட்டுள்ளது” தகவல்
Published on

புதுடெல்லி,

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்து மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக , 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.

பண மதிப்பிழப்பால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவிய போது உடனடியாக மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் விட்டது.

2018ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பு 18.03 லட்சம் கோடியாக இருந்தது. அதில் 6.73 லட்சம் கோடி ரூபாய், அதாவது 37 சதவீதம், 2000 ரூபாய் நோட்டுக்களாகும். 7.73 லட்சம் கோடி அதாவது 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்களாகும். மற்றவை அதைவிட குறைந்த மதிப்புள்ள நோட்டுக்கள்.

2000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கப்படுவதாகவும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்ற காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வது, பண பதுக்கலுக்கும், கருப்பு பண வர்த்தகத்துக்கும் மேலும் உதவி செய்யும் என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன.

இந்த நிலையில்தான், ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளைக் குறைந்த அளவில் வைத்திருக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ முடிவெடுக்கும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக, 'தி பிரின்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளின் வரத்தை குறைப்பதால் ரூ.500 நோட்டை அச்சிடுவதை அதிகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com