

புதுடெல்லி,
பிஜி நாட்டில் நடி நகரில் வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை காமன்வெல்த் சட்ட மந்திரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவை சேர்ந்த மந்திரிகள், அட்டார்னி ஜெனரல்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. இதனையேற்று இந்தியா தரப்பில் மந்திரிகள் செல்வார்கள் என கூறப்படுகிறது.
இதனை தி காமன்வெல்த் வெளியிட்ட பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது. இந்த கூட்டம் நடத்துவதற்காக பிஜி அரசுக்கு, காமன்வெல்த் பொது செயலாளர் ஷிர்லி போச்வே தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.
3 நாள் நடைபெறும் கூட்டத்தில், அன்றாட வாழ்க்கையை வலுவான சட்டப்பூர்வ வழிமுறைகள் எப்படி பாதுகாக்கும் என்று சட்ட மந்திரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அதனுடன், ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்கும் திறன் மற்றும் நல்ல வாழ்க்கைக்கான வருவாயை ஈட்டுவதில் இருந்து, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கிய சமூகத்தில் மக்கள் வாழ்வதற்கான உரிமை ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்படும்.
உலகம் முழுவதும் சட்டத்தின் ஆட்சி நிலையாக சரிந்து வரும் சூழலில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. நீதியை அணுகுவதை மேம்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நவீனப்படுத்துவதற்கான நடப்பு நடைமுறைகளை மந்திரிகள் ஏற்று கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, நிலையான சமூகம், சிறந்த பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் சட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பற்றியும் ஆலோசிக்கப்படும்.