பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு


பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
x

2023 அக்டோபர் 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாஸ்போர்ட் வழங்குதல், கல்வி நிறுவன சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருமண பதிவு, அரசு பணி நியமனம், ஆதார் எண் வழங்குதல் ஆகியவற்றுக்கு, ஒரு நபரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்துக்கு ஆதாரமாக பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என இந்த சட்டம் கூறுகிறது. இதன் அடிப்படையில் பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2025, அரசிதழில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக வெளியிடப்படிருந்த அறிக்கையில், "கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாகிறது. மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 2023, அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்கள், பிறப்பு சான்றிதழ் இல்லாவிட்டால் வழக்கம்போல பிறந்த தேதிக்கான ஆவணமாக மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தின் மாற்று சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு ஊழியர்களாக இருந்தால் பணி ஆணை, வாக்காளர் அட்டை, காப்பீட்டு பத்திரம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை பிறந்த தேதிக்கான ஆவணமாக இணைக்கலாம்.

இதற்கு முன்பு, கடந்த 1989-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது கட்டாயம் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு, பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணத்தை இணைத்தால் போதும் என பாஸ்போர்ட் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story