

டெல்லி,
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது முறையாக பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றதுமுதல் இந்தியா, சீனா, கடனா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதித்தார். குறிப்பாக, இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல மாதங்களாக, பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்த ஆண்டுக்குள் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றம் என்ற நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்ற நிலையில் அவரிடம் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர் கூறுகையில், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சில விஷயங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அது குறித்து பொதுவெளியில் இப்போது பேச நான் விரும்பவில்லை. அமெரிக்கா போன்ற பொருளாதார நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது நீங்கள் உங்களுக்கு அமெரிக்காவுடன் என்ன ஒப்பந்தம் செய்துகொள்கிறீர்கள் என்பது மற்றொரு பகுதி இதே சூழ்நிலையில் பிற நாடுகள் எவ்வாறு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டதோ அதேபோன்று நாம் எவ்வாறு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்கிறோம் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.
என்றார்.