அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான குரலாக இந்தியாவுக்கு உலக நாடுகள் அங்கீகாரம் - ஜெய்சங்கர் பெருமிதம்

அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான குரலாக இந்தியாவுக்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளாதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் புயலை சந்தித்து வருகின்றன.

இதற்கு மத்தியில் இந்திய வெளியுறவு கொள்கையின் சமீபத்திய வெற்றிகள் குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று இரு அவைகளிலும் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்து பேசினார். மேலும் வெளிநாட்டு தலைவர்களுடன், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளின் சமீபத்திய சந்திப்பு, பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை குறித்தும் அவர் விவரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜி20 தலைம

இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலம் தொடங்கிய கடந்த 2022 ஆண்டு முதலே ஜி20 அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா அனுபவித்து வருகிறது. இந்த உச்சி மாநாட்டை நாம் செப்டம்பரில் நடத்த உள்ளோம்.

இந்தியாவின் ஜி20 தலைமைப்பதவி, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை ஊக்குவிப்பதிலும், தற்சார்பு பார்வையை நனவாக்குவதற்கும் ஒரு உந்துசக்தியாக விளங்கி வருகிறது. உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக நம்பகமான மற்றும் பயனுள்ள வளர்ச்சிக்கான பங்காளியாக இந்தியா உருவாகி வருகிறது.

நமது வளர்ச்சிக்கான பங்களிப்பு தற்போது 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் தேவ அடிப்படை, வெளிப்படை, அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல் சார்ந்தவை மற்றும் ஆலோசனை அணுகுமுறையை நம்பியுள்ளன.

வளர்ச்சிக்கான குரல்

சர்வதேச விவகாரங்கள் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையிலும், சிக்கலாகவும் உள்ளது. இந்த சூழலில் மக்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது சமூகத்தின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களால் வழிநடத்தப்படுகிறது.

இன்று, இந்தியா பேசினால் அதை உலகம் அங்கீகரிக்கிறது. ஏனெனில் இந்தியா தனக்காக மட்டுமின்றி மேலும் பலருக்காகவும் பேசுகிறது. மேலும் அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான குரலாக இந்தியா பேசுகிறது.

கடந்த மாதம் பிரதமர் மோடி மேற்கொண்ட அமெரிக்காவுக்கான அரசுமுறை பயணத்தில் அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் 2-வது முறையாக உரையாற்றும் அரிதான கவுரவம் வழங்கப்பட்டது.

உக்ரைனில் கடந்த ஆண்டு தொடங்கிய போரின்போதும், சூடான் கிளர்ச்சியிலும் இந்தியா தனது மக்களை திக்கற்றவர்களாக விட்டு விடவில்லை. ஆபரேஷன் காவேரி, ஆபரேஷன் கங்கா போன்ற மீட்பு நடவடிக்கைகளின்போது இந்திய குடிமக்களை மீட்டது மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் உதவிகளை வழங்கினோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

நீங்கள் என்ன மாதிரியான இந்தியா

மாநிலங்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தபோது ஆளுங்கட்சி எம்.பி.க்கள், 'மோடி, மோடி' என கோஷமிட்டனர்.

இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 'இந்தியா... இந்தியா...' என தங்கள் கூட்டணியின் பெயரை தொடர்ந்து முழங்கியவாறு இருந்தனர். அத்துடன் 'வாருங்கள் வாருங்கள் பிரதமரே அவைக்கு வாருங்கள்' என்பன போன்ற கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஜெய்சங்கர், எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஆவேசமாக சாடினார்.

அவர் கூறுகையில், 'இந்திய ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் வெளிநாடுகளில் உயரிய கவுரவம் பெறுகின்றனர். உங்களால் ஜனாதிபதியை, துணை ஜனாதிபதியை, பிரதமரை மதிக்க முடியாவிட்டால், வெளியுறவு மந்திரியை பேச அனுமதிக்காவிட்டால் அது மிகவும் வருந்தத்தக்க நிலை. தேச நலன் சார்ந்த விவகாரங்களில் அரசியலை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தியாவின் நலன்களுக்கு செவிசாய்க்க தயாராக இல்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன மாதிரியான 'இந்தியா'?' என கேள்வி எழுப்பினார்.

இதைப்போல மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் ஜெய்சங்கரின் உரை பல முறை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com