

புதுடெல்லி,
அயோத்தி பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. இதையடுத்து, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், இந்துமுஸ்லிம் ஆகிய இருதரப்புக்கும் சமரசம் செய்ய முன்வந்தார். அயோத்தி பிரச்சனையை தீர்க்கும் வகையில் அவர் பல்வேறு தரப்பிடம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறார். நேர்மறையான பதில்கள் கிடைக்கிறது எனவும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறிஉள்ளார்.
இப்போது சர்ச்சைக்குரிய பிரச்சனையில் மேலும் சர்ச்சையை சேர்க்கும் வகையில் அவருடைய அறிக்கையானது அமைந்து உள்ளது.
இந்தியா டுடே செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசிஉள்ள ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ராமர் கோவில் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் நாம் ஒரு சிரியாவை இந்தியாவில் கொண்டிருப்போம், என கூறிஉள்ளார். சிரியாவில் அரசு ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆயுதப்போர் நடைபெற்று வருகிறது. 8வது ஆண்டாக நடைபெற்று வரும் போரில் இதுவரையில் 465,000 சிரியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரு மில்லியன் பேர் காயம் அடைந்து உள்ளனர், 12 மில்லியன் பேர் இடமற்று, அகதிகளாகி உள்ளனர்.
சிரியாவில் இப்போது நடைபெற்று வரும் போரில் பொதுமக்கள், சிறார்கள் உயிரிழந்து வருகிறார்கள். உலக அரங்கில் கண்டனம் தெரிவிக்கப்பட்டாலும் போரில் சிரிய அரசும், அதன் நட்பு நாடான ரஷியாவும் ஸ்திரமாக உள்ளது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் இந்தியாவும் சிரியாவாகும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறிஉள்ளார். அயோத்தி விவகாரத்தில் இஸ்லாமியர்கள் தங்களுடைய நிலையை விட்டுக்கொடுக்க வேண்டும், அயோத்தி விவகாரத்தில் ஒரு நல்லெண்ண நகர்வாக இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும், அயோத்தி இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடம் கிடையாது, என கூறிஉள்ளார்.
பிரச்சனைக்குரிய பகுதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க முடியாது, மற்றொரு இடத்தில் ராமரை பிறக்க வைக்க முடியாது, என கூறிஉள்ளார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். சர்ச்சைக்குரிய பகுதியில் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் மருத்துவமனை கட்டவேண்டும் என்ற கோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டார். அயோத்தி பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சியாக இதுவரையில் அயோத்தி, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் மொத்தம் 500 தலைவர்களை நேரடியாகவும், வீடியோ கான்பிரஸ் மூலமாகவும் பேசிஉள்ளார்.