‘எந்த சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயார்’ - தளபதி தனோயா பேட்டி

எந்த சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது என்று தளபதி தனோயா தெரிவித்தார்.
‘எந்த சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயார்’ - தளபதி தனோயா பேட்டி
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோயா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை, வெளிநாடுகளின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் போன்றவற்றை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில் நமது அண்டை நாடுகள் (பாகிஸ்தான், சீனா) தங்களுடைய ராணுவத்தை நவீனப்படுத்துவதும், புதுப்புது ஆயுதங்களை ராணுவத்தில் சேர்ப்பதும் கவலையளிப்பதாக உள்ளது.

அதேநேரம் இந்திய விமானப்படை இதுபோன்ற சவால்களை திறமையுடன் சமாளிக்கும் திறனைக் கொண்டு இருக்கிறது. நாட்டின் நலனுக்காக எத்தகைய சவாலையும் சந்திக்க 24 மணி நேரமும் நமது விமானப்படை தயாராக இருக்கிறது.

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது. அது வழக்கமான தாக்குதல் முறையிலோ அல்லது இதர வழிகளிலோ அமையலாம். அதற்கான ஆயுதத் திறன் நம்மிடம் உள்ளது.

உலகிலேயே சி-17 ரக சரக்கு விமானங்களை கொண்ட 2-வது மிகப்பெரிய படையாக இந்திய விமானப்படை திகழ்கிறது. இதன் மூலம் பேரிடர் காலங்களில் நமது நட்பு நாடுகளுக்கு மனித நேய உதவிகளை அளிக்க முடியும். மேலும் இந்திய- பசிபிக் கடல் பிராந்தியத்தில் அச்சுறுத்தல்கள் எழும் சூழல் உள்ளதால் இந்திய விமானப்படை எந்த நேரமும் மிகுந்த எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் உள்ளது.

இந்திய விமானப்படையில் மிக்-29, ஜாகுவார், மிராஜ்- 2000 ஆகிய போர் விமானங்கள் பகுதி வாரியாக தரம் மேம்படுத்தப்படும். 83 தேஜாஸ் இலகு ரக போர் விமானங்கள், 36 ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டு இந்திய விமானப்படை மேலும் பலப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

திபெத்திய பகுதியில் சீன ராணுவம் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து தனோயாவிடம் கேட்டபோது, இது முக்கியமான விஷயம். எனவே அதற்கு இணையாக நாமும் நமது எல்லைப் பகுதியில் கட்டமைப்புகளை மேற்கொள்வோம் என்று பதில் அளித்தார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com