காசிண்ட்-2026 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவ வீரர்கள் கஜகஸ்தான் பயணம்

இரு நாட்டு ராணுவங்களின் திறனை வலுப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்த வழக்கமான கூட்டுப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
காசிண்ட்-2026 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவ வீரர்கள் கஜகஸ்தான் பயணம்
ராணுவ வீரர்கள்
Published on: 

புதுடெல்லி,

இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளின் ராணுவங்களுக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி கஜகஸ்தானில் உள்ள ஒஸ்கெமென் நகரில் தொடங்கியது. நேற்று தொடங்கி அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 'காசிண்ட்-2026' கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, 60 வீரர்கள் கொண்ட இந்திய ஆயுதப்படை குழு நேற்று கஜகஸ்தான் புறப்பட்டு சென்றது.

கூட்டு ராணுவப்பயிற்சி

இந்த கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவத்தின் புகழ்பெற்ற கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்களுடன், பிற ஆயுதப்படை பிரிவினர் மற்றும் இந்திய விமானப்படை வீரர்களும் கஜகஸ்தான் நாட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து பங்கேற்கின்றனர்.

பயங்கரவாத ஒழிப்பு பயிற்சி

ஐநா அவையின் அறிவுறுத்தலின்படி, போரற்ற சூழலில் இரு நாட்டு ராணுவங்களின் திறனை வலுப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்த வழக்கமான கூட்டுப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். மலையடிவார பகுதிகள் மற்றும் நகர்ப்புறங்களில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குவது குறித்து இரு நாட்டு வீரர்களும் தீவிர உத்திசார் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்

மேலும், வான்வெளி தாக்குதலுக்கான நவீன உத்திகள், ஆளில்லா வான்வெளி அமைப்புகள் மற்றும் அவற்றுக்கு எதிரான அதிநவீன ஏவுகணை அமைப்புகளை ஒருங்கிணைந்து கையாளுதல் போன்ற பல்வேறு நவீன போர்க்கால திட்டமிடல்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்த பயிற்சியில் இரு நாட்டு படைகளும் இணைந்து பயிற்சி பெறவுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com