தீ கட்டுக்குள் வந்தநிலையில்.. சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை

காற்று மண்டலம், கடல்நீர் மாசுப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கண்ணூர்,
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9-ந் தேதி முன்தினம் சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.பி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.
கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 20 டன் வெடிபொருட்கள், அபாயகரமான ரசாயனங்கள் இருந்ததால் வெடித்து சிதறின. இதனால் கப்பலில் இருந்து கரும்புகை கிளம்பியது. அதோடு கப்பலில் இருந்து அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தன. கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் உயிர் தப்பிப்பதற்காக, கடலில் குதித்தனர்.
இதில் கடலில் தத்தளித்த 18 பேரை கடல் எல்லை பாதுகாப்பு படையினர், கடற்படையினர் மீட்டனர். மேலும் கடலில் மாயமான 4 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சிறப்பு நீச்சல் வீரர்கள் கடலுக்குள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தீ விபத்தை அடுத்து, கடல் எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான சதேத், சமுத்திர பிரகாரி, ஆர்னேஷ், ராஜ்தூத், சமர் ஆகிய 5 கப்பல்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த கப்பல்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 நாட்களாக தீயணைப்பு பணி நடந்து வந்தது. நேற்று 3-வது நாளாக கடல் எல்லை பாதுகாப்பு படையினர், கடற்படையினர், மீட்பு குழுவினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கப்பலின் நடு பகுதியில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு உள்ளது. ஆனால், கப்பலின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் தீ எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த 5 கப்பல்கள் உதவியுடன் கடல் எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் தீயணைப்பு பணியை துரிதப்படுத்த பெங்களூருவில் இருந்து 2 கப்பல்கள், மும்பையில் இருந்து ஒரு கப்பல் உள்பட 4 கப்பல்கள் கொண்டு வரப்பட உள்ளது.
கப்பலின் முன் பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு தீ பரவி எரிந்து வந்தது. இதனால் ஹெலிகாப்டர் மூலம் கப்பல் அருகே செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கப்பல் 10 டிகிரி வரை சாய்ந்து உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து அலை காரணமாக சரக்கு கப்பல் கட்டுப்பாடு இன்றி நகர்ந்து செல்கிறது. இதை தடுக்க கடல் எல்லை பாதுகாப்பு படையினர் முயற்சித்து வருகின்றனர்.
தீயை முழுமையாக அணைக்க முடியாவிட்டால் அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு தீயணைப்பு நிபுணர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் 1,754 கன்டெய்னர்கள் உள்ளது. இதில் 1,083 கன்டெய்னர்கள் கப்பலின் அடித்தட்டிலும், 671 கன்டெய்னர்கள் மேல் பகுதியிலும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
143 கன்டெய்னர்களில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயன பொருட்கள் உள்ளதாக தெரிகிறது. இதனால் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து கோழிக்கோடு வடகரா முதல் அரியூர் வரை கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்கள், மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது பொருட்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கினாலோ அல்லது கடலில் மிதந்து கிடந்தாலோ, அவற்றை தொடக்கூடாது. அதுகுறித்து உடனடியாக கடல் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கப்பல் விபத்தால் காற்று மண்டலம் மாசடைந்து உள்ளதா என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பையாம்பலம் பகுதியில் 2 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, வாயு மாசடைந்து உள்ளதா என மாதிரி சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகிய அளவு பரிசோதிக்கப்படுகிறது. கப்பலில் தீ எரிந்து கொண்டிருப்பதால், கடல் நீரில் மாசு ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்கவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதனிடையே சரக்கு கப்பலில் தற்போது தீ கட்டுக்குள் வந்தபோதும் மீண்டும் கரும்புகை எழுந்த வண்ணம் உள்ளது. தீயை கட்டுப்படுத்திய நிலையில் விபத்து ஏற்பட்ட கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கப்பலில் இருந்து 20க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் மூழ்கியதாக தகவல் வெளியானதால் அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.






