அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் ரூ.1.91 லட்சம் கோடி முதலீடு

அமெரிக்காவில் இந்திய நேரடி வெளிநாட்டு முதலீடு 70,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என ஜான் கொரொனாடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் ரூ.1.91 லட்சம் கோடி முதலீடு
Published on: 

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இந்திய-அமெரிக்க வர்த்தக சபை(IACC) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 23-வது இந்திய-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாட்டில், அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜான் கொரொனாடோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவு

“2030-ம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர்(ரூ.46.6 லட்சம் கோடி) இருதரப்பு வர்த்தக இலக்கை அடைய, ஆழமான முதலீடு, மேம்பட்ட புத்தாக்கம்(Innovation) மற்றும் வலுவான விநியோக சங்கிலி ஒருங்கிணைப்பு தேவைப்படும்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவானது, இனி வியாபாரிகள், நுகர்வோர் அல்லது வர்த்தக பரிமாற்றங்களால் மட்டும் வரையறுக்கப்படாது. அது புத்தாக்கம், முதலீடு மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் இணைந்து உருவாக்கும் ஒரு கூட்டாண்மையால் வரையறுக்கப்படும்.

இந்திய முதலீடுகள்

இந்த ஆண்டு நடைபெற்ற ‘செலக்ட் யூ.எஸ்.ஏ.’(Select USA) முதலீட்டு மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்திய முதலீடுகள், மருந்துத்துறை, உயிர் அறிவியல், மேம்பட்ட உற்பத்தி, எரிசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கியிருந்தன.

வேலைவாய்ப்புகள்

இந்த மாநாட்டின்போது பன்னிரண்டு இந்திய நிறுவனங்கள் 1 பில்லியன் டாலர்(ரூ.1.91 லட்சம் கோடி) அளவிலான புதிய முதலீட்டு திட்டங்களை அறிவித்தன. இது, ஒரே வர்த்தக குழுவிடம் இருந்து வந்த மிகப்பெரிய முதலீட்டு அறிவிப்பாகும். அமெரிக்காவில் இந்திய நேரடி வெளிநாட்டு முதலீடு ஏற்கனவே 70,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை அமெரிக்காவில் உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா தனது உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு நம்பகமான கூட்டாளிகளைத் தேடிக்கொண்டிருந்தது. இந்திய நிறுவனங்கள் பல துறைகளில் தங்களின் போட்டித்திறனை நிரூபித்துள்ளன. இந்திய முதலீட்டாளர்கள், தங்களின் அமெரிக்க முதலீடுகளை, தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு துணை அம்சமாகவே கருதுகின்றனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X