இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா சக வீராங்கனை மீது மோசடி புகார்.. பரபரப்பு

தீப்தி சர்மா மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

ஆக்ரா,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் டிஎஸ்பி-ஆக நியமிக்கப்பட்டார். இவர் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

அந்த அணியில் அங்கம் வகிக்கும் சக வீராங்கனையான ஆருஷி கோயல் மீது திருட்டு மற்றும் நம்பிக்கை மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். கோயல் தன்னை ரூ .25 லட்சத்திற்கு மேல் ஏமாற்றியதாகவும், மதிப்புமிக்க பொருட்களைத் திருட ஆக்ராவில் உள்ள தனது பிளாட்டை உடைத்ததாகவும் தீப்தி சர்மா கூறியுள்ளார். திருடப்பட்ட விலையுயர்ந்த பொருட்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் வெளிநாட்டு பணமும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆருஷி கோயல் மீது தீப்தி சர்மாவின் சகோதரரான சுமித் ஆக்ரா சதார் ஆக்ரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வேயில் பணியாற்றி வரும் அருஷியும். தீப்தி சர்மாவும் தோழிகளாக இருந்து வந்தனர். இந்த நட்பை பயன்படுத்தி ஆருஷி, அவரது பெற்றோர் மஞ்சு, தன்சந்த் ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு போலியான காரணங்களை கூறி தீப்தி சர்மாவிடம் இருந்து ரூ.25 லட்சம் வரை ஏமாற்றியுள்ளனர்.

தீப்தி பணத்தை திரும்ப கேட்டபோது, முதலில் பிறகு தருகிறோம் என்று கூறி சமாளித்த அவர்கள் பின்னர் அவருடன் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் ஆருஷி, தீப்தி சர்மாவின் வீட்டிற்குள் நுழைந்து தங்க நகை, பணத்தை திருடி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மகளிர் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com