உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்..!! - இந்திய தூதரகம்

எந்த வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தி உடனே வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்..!! - இந்திய தூதரகம்
Published on

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை.

ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.

இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது. போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சூழலில் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, மாணவர்கள் மீட்பு பணி குறித்து பிரதமர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தொடர்ந்து உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்தியர்களை இன்று உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி ரயில்கள் அல்லது எந்த வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தி தலைநகரை விட்டு உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய தூதரகத்தால் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com