அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 3 மாதங்களாக தொடர் சரிவு; அடுத்து என்ன? விரிவான ஓர் அலசல்

அடுத்த ஆண்டில் இந்தியாவின் வர்த்தகமும் பலவீனமடையும் நிலை ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
புதுடெல்லி,
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். கடந்த ஜனவரி 20-ந்தேதி இதற்காக நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அப்போது முதல் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார். நடப்பு ஆண்டில் டிரம்பின் அதிரடி வரி வதிப்பு நடவடிக்கைகளால் உலக நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதில், இந்தியாவும் அடங்கும்.
இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 5-ல் ஒரு பங்கு அமெரிக்காவுக்கு செல்கிறது. இந்நிலையில், இந்திய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு, டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்புகளால், இந்திய ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (ஜி.டி.ஆர்.ஐ.) சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், 2025-ம் ஆண்டில் இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் என ஆகஸ்டு 27-ந்தேதி அமெரிக்க அரசு, உயர்த்தியதில் இருந்து இந்த சரிவு காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சரிவானது, ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. மே மாதத்தில் ரூ.77,294 கோடி என்ற அளவில் ஏற்றுமதி இருந்தது. இது 4.8 சதவீதம் அதிகரித்து இருந்தது.
ஆனால், ஜூனில் 5.7 சதவீதம் சரிவை சந்தித்து, ரூ.72,902 கோடியாக இந்திய ஏற்றுமதி இருந்தது. ஜூலையில் அது இன்னும் சரிவை சந்தித்தது. இதன்படி, ஜூலையில் 3.6 சதவீதம் சரிவுடன் ரூ.70,267 கோடி என்ற அளவில் ஏற்றுமதி இருந்தது.
ஜூன், ஜூலையை தொடர்ந்து ஆகஸ்டு மாதத்திலும் இந்திய ஏற்றுமதியானது தொடர்ந்து 3-வது மாதத்திலும் சரிவை கண்டது. ஜூலையுடன் ஒப்பிடும்போது, 16.3 சதவீதம் சரிவை சந்தித்து, ரூ.58,849 கோடியாக இந்திய ஏற்றுமதி உள்ளது. நடப்பு ஆண்டில் இந்த மாதத்திலேயே பெரும் சரிவை இந்திய ஏற்றுமதி துறை சந்தித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டம், ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்பின் வரி விதிப்பு அதிகரிப்பு எதிரொலியாகவே, இந்திய ஏற்றுமதி துறை பெருத்த சரிவை கண்டுள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை, வழக்கம்போல் விதிக்கப்பட்ட வரிகளின் அடிப்படையில், அமெரிக்காவுக்குள் இந்திய சரக்குகள் ஏற்றுமதியாகி வந்தன.
ஆனால், ஏப்ரல் 5 முதல் சர்வதேச அளவில் 10 சதவீத வரி விதிப்பு என்ற முடிவை அமெரிக்கா எடுத்தது முதல், பாதிப்பு ஏற்பட தொடங்கியது. அப்போது சிறிய அளவிலேயே அதன் தாக்கம் இருந்தது. அதன்பின்னர், புதிய வரிகளால், ஜூனில் இந்தியாவின் ஏற்றுமதிக்கு சவால் ஏற்படும் வகையில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது.
எனினும், செப்டம்பர் மாதத்தில் இந்த சரிவு இன்னும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், 50 சதவீத வரி என்ற முழு அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் முதல் மாதம் ஆகும் என அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த 50 சதவீத வரி விதிப்பு 2026 நிதியாண்டின் இறுதி வரை நீடிக்கும் என்றால், அதனால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி ரூ.26,350 கோடி முதல் ரூ.30,740 கோடி வரை பாதிக்கப்படும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனால், மத்திய அரசு விரைவாக இதற்கான பதில் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தொழில் கூட்டமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டி காட்டுகிறது.
சமீபத்திய ஜி.எஸ்.டி. வரி குறைப்புகள் பல்வேறு உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான சலுகைகளை வழங்கியபோதும், ஏற்றுமதி சார்ந்த நிவாரணம் அளிக்கும் அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
அதனால், இந்த நீண்டகால வரி விதிப்புகள் வேலை இழப்புகளை அதிகரிக்க செய்வதுடன், அடுத்த ஆண்டில் இந்தியாவின் வர்த்தகமும் பலவீனமடையும் நிலை ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.






