

புதுடெல்லி,
ஏமன் அரசுக்கு எதிராக அங்குள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் உள்நாட்டுப்போரில், ஏமன் அரசு படைகளுக்கு சவுதி அரேபியா உதவி வருகிறது. இதனால் ஹவுதி படையினரின் கோபம் சவுதி அரேபியா மீது திரும்பி உள்ளது. அந்த நாட்டின் விமான நிலையங்கள், எண்ணெய் வயல்கள் போன்ற உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிர்ப்பலிகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் தமாமில் உள்ள கிங்பகத் சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடந்தது. இந்த பயங்கர தாக்குதலில் விமான நிலையத்தில் பெரும் சேதம் விளைந்தது. இதில் இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். இதில் இந்தியா, வங்காளதேசம், ஏமன் நாடுகளைச் சேர்ந்த தலா 2 பேர், நேபாளம், சவுதி அரேபியாவை சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.
அவர்களுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் உயிரிழந்ததை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், சவுதி அரேபியா அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் உயிரிழந்த வர் மற்றும் காயமடைந்த இந்தியர்கள் பற்றிய விவரங்களை தூதரகம் வெளியிடவில்லை. அது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து சில மணி நேரத்துக்கு விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் மீண்டும் விமானப்போக்குவரத்து தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதல் ஏவுகணை மூலமோ அல்லது டிரோன் மூலமோ நடந்தது என்பதை சவுதி அரேபியா வெளியிடவில்லை. மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஹவுதி படையினர் உள்ளனரா என்றும் சவுதி அரேபியா உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக சவுதி அரேபியாவின் அராம்கோ சைபா எண்ணெய் வயல் மீது நேற்று முன்தினம் ஹவுதி அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதிலும் இந்தியர் ஒருவர் காயமடைந்தார். இதனால் தமாம் விமான நிலைய தாக்குதலிலும் அவர்களே ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தமாம் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 2 பேர் காயமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சவுதி அரேபியாவின் தமாம் விமான நிலையம் உள்பட நாட்டின் உள்கட்டமைப்புகள் மற்றும் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த தாக்குதல் களில் துரதிர்ஷ்டவசமாக உயிர்பலிகளும், காயங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த தாக்கு தல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. உடனடியாக இவை நிறுத்தப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அரசு, காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளது.