

லக்னோ,
மத்திய பல்கலைக்கழகமான அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்போது காஷ்மீர் இல்லாத இந்திய மேப்பை பயன்படுத்திய விவகாரத்தினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கலாச்சாரத்துறை வளாக நுழைவு வாயிலில் வைத்திருந்த மிகப்பெரிய போஸ்டரில் காஷ்மீர் இடம் பெறவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்காக பொதுக் கல்வி மையம் செயல்படுகிறது.
அதன்சார்பில் அஸ்கர் வஜாஹித் எனும் நாடகக் கலைஞரின் ஜின் லாகூர் நய் தேக்யா (லாகூரைப் பார்க்காதவர்கள்) எனும் நாடக அறிவிப்பு வெளியானது. நாடகத்தின் பெரிய அளவிலான போஸ்டரில் இந்திய வரைபடம் இருந்தது. இந்திய வரைபடத்தில் காஷ்மீர் பாகிஸ்தானிலும், அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதி சீனாவிலும் காட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பா.ஜனதா புகார் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் தாரீக் மன்சூருக்கு அலிகார் பா.ஜனதா தலைவர் மான்வேந்தர் பிரதாப் சிங் புகார் கடிதம் எழுதினார். இதையடுத்து போஸ்டர்கள் அகற்றப்பட்டதுடன், ஏற்பாட்டில் தொடர்புடைய விபா சர்மா, ரஸியா உள்ளிட்ட மூவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 1980-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட அஸ்கரின் இந்த நாடகம் மிகவும் பிரபலமானது. அலிகர் முஸ்லீம் பல்கலையில் பலமுறை நடைபெற்று பெரும் வரவேற்பை பெற்ற நாடகத்தின் பதாகையால் கிளம்பிய சர்ச்சை காரணமாக இந்தமுறை ரத்து செய்யப்பட்டு விட்டது.
பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஷாபி கித்வாய் பேசுகையில், போஸ்டர்களில் சில பிரச்சனைகள் இருந்தது, எனவே அனைத்து போஸ்டர்களையும் நிர்வாகம் நீக்கி விட்டது. நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இப்போது முழு விசாரணை நடைபெற்றதும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.