காஷ்மீர்: திரால் சவுக்கில் முதன்முறையாக பறந்த இந்திய தேசிய கொடி


காஷ்மீர்:  திரால் சவுக்கில் முதன்முறையாக பறந்த இந்திய தேசிய கொடி
x
தினத்தந்தி 27 Jan 2025 4:39 AM IST (Updated: 27 Jan 2025 12:51 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திரால் சவுக் பகுதியில் முதன்முறையாக இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டு உள்ளது.

புல்வாமா,

நாட்டின் 76-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் நேற்று நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் அணிவகுப்பு நடந்தது. பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றிருந்தன.

சுகோய், தேஜஸ், ரபேல் உள்ளிட்ட விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களிலும் சி.சி.டி.வி. கேமிராக்கள் கொண்டு கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழலில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திரால் சவுக் பகுதியில் முதன்முறையாக இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டு உள்ளது. இந்த கொடியை 3 தலைமுறையை சேர்ந்தவர்கள் சேர்ந்து ஏற்றி உள்ளனர்.

இதுபற்றி இந்திய ராணுவம் வெளியிட்ட செய்தியில், வயது முதிர்ந்த நபர், இளைஞர் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் சேர்ந்து கொடியை ஏற்றினர். தலைமுறைகளின் ஒற்றுமை மற்றும் தேசத்திற்கான பகிரப்பட்ட உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றை இது வெளிப்படுத்துகிறது.

இந்த செயல்முறை, ஒளிரும் வருங்காலம் நோக்கிய கூட்டு பயணத்தில், வயது வேற்றுமையின்றி இந்திய மக்களுக்கு இடையேயான வலுவான பிணைப்பு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பக்சி ஸ்டேடியத்தில் துணை முதல்-மந்திரி சுரீந்தர் சவுத்ரி தேசிய கொடியை ஏற்றினார். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கு தன்னுடைய நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.

1 More update

Next Story