கப்பலில் நோய் வாய்ப்பட்டு தவித்த ஜப்பானியரை பாதுகாப்பாக மீட்ட இந்திய கடற்படை

இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான வலிமையான சர்வதேச கடல்சார் ஒத்துழைப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது.
கப்பலில் நோய் வாய்ப்பட்டு தவித்த ஜப்பானியரை பாதுகாப்பாக மீட்ட இந்திய கடற்படை
Published on

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் கடலில் பயணித்து கொண்டிருந்த கப்பலில் ஜப்பானியர் ஒருவருக்கு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனினும், நோய் வாய்ப்பட்டு தவித்த அவரை மீட்க அந்நாட்டினர் யாரும் முன்வரவில்லை.

அவரால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில், இதுபற்றிய தகவல் அறிந்து, இந்திய கடற்படையினர் உடனடியாக உதவிக்கு முன்வந்தனர்.

இதுபற்றி மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கான செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், உலகளவில் பாதுகாப்புக்கான நட்புறவில் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற வகையில் இந்திய கடற்படையினர் சீ கிங் என்ற ஹெலிகாப்டரை உதவிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் உதவியுடன், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜப்பானியர் மீட்கப்பட்டார். இதன்பின்னர் அவரை வான் வழியே கொண்டு வந்து, கடற்படை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான வலிமையான சர்வதேச கடல்சார் ஒத்துழைப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com