பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை - அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டாக்டர் கைது

டாக்டர் ரித்தேஷ் கல்ரா சிலரிடம் போதைப்பொருட்களை வழங்கி பாலியல் சலுகைகளை கேட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ரித்தேஷ் கல்ரா(வயது 51). இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் இவர் நோயாளியை நேரில் பார்க்காமலேயே சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்று மோசடி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, உரிய மருத்துவ காரணம் இன்றி போதை மருந்துகளை ரித்தேஷ் கல்ரா விநியோகம் செய்ததாகவும், அவ்வாறு போதை மருந்துகளை வழங்கியபோது சில பேரிடம் பாலியல் ரீதியான சலுகைகளை ரித்தேஷ் கல்ரா கேட்டுப் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிகிச்சை என்ற பெயரில் பாலியல் ரீதியாக டாக்டர் ரித்தேஷ் தங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்று பெண் நோயாளிகள் சிலர் கூறியதாக ரித்தேஷ் கல்ராவுடன் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் சிலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையில் டாக்டர் ரித்தேஷ் கல்ரா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வீட்டு சிறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், ரித்தேஷ் கல்ரா மருத்துவர் பணியை தொடர்ந்து மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலினா ஹப்பா, "டாக்டர்கள் சமுதாயத்தில் மிகவும் பொறுப்பான பதவியில் இருக்கின்றனர். ஆனால் ரித்தேஷ் கல்ரா தனது பதவியை பயன்படுத்தி அப்பாவி நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் நியூ ஜெர்சி சுகாதாரத்துறை திட்டத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் சட்டத்தை மீறியது மட்டுமின்றி, உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.






