புதுடெல்லி: நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் தாம் நகரையும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியையும் இணைக்கும் வகையில் வாராந்திர ரயில் சேவையை இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய ஆன்மிகத் தலங்களான ஜனக்பூர் தாம் மற்றும் அயோத்தி இடையே இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
சுமார் 604 கி.மீ. தூரத்தைக் கடந்து செல்லும் இந்த ரயில், பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் பல்வேறு நகரங்கள் வழியாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு சனிக்கிழமையும் நேபாளத்தின் ஜனக்பூர் தாமில் இருந்து ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் அயோத்தி கண்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இந்த ரயில் ஜெய்நகர், மதுபானி, ஷிஷோ, சீதாமர்ஹி, ரக்சால், நர்கதியாகஞ்ச், கோரக்பூர், பஸ்தி, மனக்பூர் மற்றும் அயோத்தி தாம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஜனக்பூர் தாமுக்கும், ராமர் பிறந்த இடமாகப் போற்றப்படும் அயோத்திக்கும் இடையே நேரடி ரயில் இணைப்பு ஏற்படுவதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கல்வி, வர்த்தகம் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்காக இரு நாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ரயில் சேவை மூலம் சுற்றுலா, தங்கும் விடுதிகள், உள்ளூர் வணிகர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் சேவையைச் செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் நேபாள அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.