ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு முடிவு


ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த  புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு முடிவு
x

டெல்லி ரெயில் நிலையத்தில் ரெயில் வரும் பிளாட்பாரத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடிகளாலேயே 18 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டதால்

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளா விழாவையொட்டி கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தனர். இதேபோல டெல்லியில் கும்பமேளாவுக்கு செல்ல காத்திருந்த ரெயில் பயணிகள் நெரிசலில் சிக்கி 18 பேர் இறந்தனர்.இந்த உயிரிழப்புகளை பாடமாக எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் அதுபோன்ற நிலைகளை தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய ஓர் உயர்நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்க முடிவுகள் வருமாறு:-

டெல்லி ரெயில் நிலையத்தில் ரெயில் வரும் பிளாட்பாரத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடிகளாலேயே 18 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டதால், இனி உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்து இருக்கும் பயணிகள் மட்டுமே பிளாட்பார்மிற்குள் நேரடியாக செல்ல முடியும். வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்து இருப்பவர்கள் பிளாட்பாரத்துக்கு ரெயில் வந்தபிறகே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக நாடு முழுவதும் முக்கியமான 60 ரெயில் நிலையங்களுக்கு வெளியே பயணிகளுக்கு காத்திருப்பு மையம் கட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அதுபோல ரெயில்நிலையங்களில் நடை மேம்பாலத்தை 12 மீட்டர் மற்றும் 6 மீட்டர் அகலங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கண்காணிப்பை தீவிரப்படுத்த கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். பெரிய ரெயில் நிலையங்களில் போர்க்கால அறைகள் (வார் ரூம்) அமைக்கப்படுகிறது. நெரிசல் காலங்களில் அனைத்துத்துறை அதிகாரிகளும் இங்கே அமர்ந்து நெரிசலை குறைப்பது தொடர்பாக நேரடி ஆலோசனையில் ஈடுபடுவார்கள். ரெயில் நிலையங்களின் நிலைய அதிகாரிகளுக்கு நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது. டிக்கெட் விற்பனையை கட்டுப்படுத்தும் உரிமைகூட அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

1 More update

Next Story