கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் உலகத்துக்கு வழிகாட்டும் இந்திய விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகள் உலகத்திற்கு வழிகாட்டியாக திகழ்கின்றனர்.
கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் உலகத்துக்கு வழிகாட்டும் இந்திய விஞ்ஞானிகள்
Published on

புதுடெல்லி,

உலக அளவில் இந்தியர்கள் எல்லாவற்றிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியிலும் இந்திய விஞ்ஞானிகள்தான் உலகத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

டாக்டர் எஸ்.எஸ்.வாசன்

காமன்வெல்த் அறிவியல், தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியாக இருப்பவர் இந்தியரான டாக்டர் எஸ்.எஸ்.வாசன். இவர் ஆஸ்திரேலியாவில் விலங்கு சுகாதார ஆய்வகத்தில் ஆபத்தான நோய்க்கிருமி குழுவை வழிநடத்தி வருகிறார். கடந்த காலத்தில், ஆபத்தான நோய்க்கிருமிகள் தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முன்னேற்றங்களை இந்த அமைப்பு கண்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரோட்ஸ் அறக்கட்டளை இதுபற்றி கூறும்போது, சீனாவுக்கு வெளியே, ஆராய்ச்சிக்காக வைரஸ்களை வளர்த்தெடுப்பதில் டாக்டர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வைரஸ் தொடர்பான உலகளாவிய தரவுகளை பகுப்பாய்வு செய்ய மரபணு வரிசைமுறையை (ஜீன் மேப்பிங்) செய்துள்ளனர் என்கிறது.

காமன்வெல்த் அறிவியல், தொழில் ஆராய்ச்சி நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி, இப்போது செயல்திறனுக்காக சோதனைகளை நடத்தி வருகிறது. பாதுகாப்பான முறையில் தடுப்பூசியை செலுத்துவதற்கான வழிமுறைகளையும் மதிப்பீடு செய்து வருகிறது.

சுனேத்ரா குப்தா

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியை சுனேத்ரா குப்தா. இவர் கொரோனா வைரசின் சிறப்பியல்புகளை பகுப்பாய்வு செய்வதற்கான ஆராய்ச்சியை இங்கிலாந்து நாட்டில் முன்னெடுத்து செய்து வருகிறார்.கொரோனா வைரஸ் தொற்றுநோயின் குணாதிசயங்கள் பற்றிய ஊகங்களை அடிப்படையாக கொண்ட இந்த ஆராய்ச்சி, சக மதிப்பாய்வின் கீழ் உள்ளது. ஊகங்களின் மாதிரி, கொரோனா வைரசில் இருந்து எழுகிற நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான புதிர்களை விடுவிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இவர்தான் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் நிலை மற்றும் அளவை மதிப்பிடுவதற்கு உடனடியாக பெரிய அளவிலான நிணநீரியல் கணக்கெடுப்பு, ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பு சக்தி) சோதனை அவசியம் என வலியுறுத்தி அழுத்தம் கொடுத்தவர் ஆவார்.

அரிஞ்சய் பானர்ஜி

இதேபோன்று குறிப்பிடத்தக்கவர் கூகுள் அறிஞர் என்று அழைக்கப்படுகிற மேக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான இந்திய டாக்டர் அரிஞ்சய் பானர்ஜி. இவர் பல ஆற்றலாளர்களை தன்னிடம் கொண்டுள்ள கனடா சன்னிபிருக் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு அங்கமும் ஆவார்.

அரிஞ்சய் பானர்ஜி மற்றும் அவரோடு சேர்ந்து பணியாற்றும் குழுவினரால் தொற்றுநோய்க்கு காரணமான கொரோனா வைரசை தனிமைப்படுத்த முடிந்திருக்கிறது.

இவர், உள்ளார்ந்த ஆராய்ச்சி ஆர்வங்களுடன் நோய் எதிர்ப்பு, வைராலஜி, வளர்ந்து வரும் நோய்த்தொற்றுகள், மூலக்கூறு உயிரியல் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சார்ஸ், மெர்ஸ், கொரோனா வைரஸ் போன்ற பல வைரஸ்கள் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் சமர்ப்பித்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார்.

இந்த விஞ்ஞானிகள் குழு கொரோனா வைரசை இந்த உலகில் இருந்து விரட்டியடித்துவிட்டால் போதும், இவர்களை உலகமே கொண்டாடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com