

புதுடெல்லி,
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியா உருவாக்கி தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி தற்போது ஐதராபாத் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், இந்த நிறுவனமும் தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பல நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன. அதில் ஒரு நிறுவனம், புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஆகும்.
இந்த தடுப்பூசியை தயாரிப்பதற்கான டெஸ்ட் உரிமம் கேட்டு இந்திய சீரம் நிறுவனம், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் நேற்று விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம், 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியை இந்த மாதம் தயாரித்து வழங்க முடியும் என்று மத்திய அரசிடம் வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் தடுப்பூசியையும் தயாரித்து வருகிறது. இதற்கான ஒழுங்குமுறை அனுமதியை அமெரிக்கா அளிக்க வேண்டும். அதற்காக இந்திய சீரம் நிறுவனம் காத்திருக்கிறது.