அமெரிக்காவில் நடந்த கோர விபத்து.. கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவி


அமெரிக்காவில் நடந்த கோர விபத்து.. கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவி
x
தினத்தந்தி 27 Feb 2025 12:00 PM IST (Updated: 28 Feb 2025 11:23 AM IST)
t-max-icont-min-icon

கோமா நிலைக்கு சென்ற மாணவியின் தந்தைக்கு அவசர விசா வழங்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என சுப்ரியா சுலே எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

மும்பை:

இந்தியாவின் மராட்டிய மாநிலம் சடாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே (வயது 35). படிப்புக்காக அமெரிக்கா சென்ற இவர், கலிபோர்னியாவில் கடந்த நான்கு வருடங்களாக தங்கியிருக்கிறார். தற்போது இறுதியாண்டு படித்து வரும் நீலம் ஷிண்டே, கடந்த 14-ம் தேதி விபத்தில் சிக்கினார். அதிவேகமாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் தலையில் பலத்த காயமடைந்ததால் நீலம் ஷிண்டே கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

இதுபற்றி மராட்டிய மாநிலத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக விசா பெற்று அமெரிக்காவுக்கு சென்று மகளை பார்க்க முடிவு செய்தனர். இதற்காக அவசர விசா கேட்டு அவரது தந்தை விண்ணப்பித்துள்ளார். ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஆவதால் செய்வதறியாது தவிக்கிறார். அவசர விசா கிடைப்பதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இத்தகவலை மராட்டிய மாநில எம்.பி. சுப்ரியா சுலே, தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், அமெரிக்காவில் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி நீலம் ஷிண்டேவின் தந்தைக்கு விசா கிடைக்க உதவும்படி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க தூதரகத்தை டேக் செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.

நீலம் ஷிண்டேவின் உடல்நிலை மற்றும் அவருக்கான சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை தரப்பில் அவ்வப்போது அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படுகிறது.

1 More update

Next Story